தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 38 வழக்குகளில் 15 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.46 லட்சத்து 56 ஆயிரத்து 564 ஆகும். மேலும் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 20 வழக்குகளில் 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் தீர்வு தொகை ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 907 ஆகும். நேற்று நடந்த சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 58 வழக்குகளில் மொத்தம் 19 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.48 லட்சத்து 46 ஆயிரத்து 471 ஆகும். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான (பொறுப்பு) பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரைசெல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்துலட்சுமி உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.


Next Story