சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும்


சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும்
x
திருப்பூர்


சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சேவூர் கைகாட்டி ரவுண்டானா

சேவூரில் முக்கிய பிரதான சாலையான கோபி சாலை, சத்தி, மைசூர் சாலை, குன்னத்தூர் சாலை, அவினாசி சாலை என நான்கு சாலையும் இணையும் இடமாக சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி காலை, மாலை, இரவு நேரங்களில் தனியார் பள்ளி பஸ்கள், பனியன் நிறுவன பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் என தினசரி 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

குறிப்பாக தினசரி பனியன் கம்பெனி பஸ்கள் பள்ளி பஸ்கள், கல்லூரி பஸ்கள் காலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டி இருப்பதால் ஒன்றையொன்று முந்தி செல்கிறது. அப்படி முந்திச் செல்லும் போது நான்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்களால் நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறது.

சிக்னல் அமைக்க வேண்டும்

சிறு தடை ஏற்பட்டால் போதும் நான்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்தும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பனியன் நிறுவன நேரம், பள்ளி நேரம், கல்லூரி நேரம் என அனைத்தும் ஒரே நேரமாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரம் மிக நெருக்கடியில் சேவூர் கைகாட்டி பகுதி போக்குவரத்தில் சிக்கி தவிக்கிறது.

எனவே இப்பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியை சிறிதாக்க வேண்டும் அல்லது நான்கு சாலைகளிலும் குறிப்பிட்ட தூரத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லையெனில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story