ஆறுகளில் கலக்கும் கழிவுநீர்; தீர்வு காண்பது எப்படி?


ஆறுகளில் கலக்கும் கழிவுநீர்; தீர்வு காண்பது எப்படி?
x
தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு என்ன தீர்வு காண்பது எப்படி? என்று பார்ப்போம்.

தேனி

மலையும் மலை சார்ந்த இடத்தை தன்னகத்தை கொண்டதாக தேனி மாவட்டம் விளங்குகிறது.

தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலை மற்றும் மலையடிவார பகுதிகளாக அமைந்துள்ளன. மலைகள் என்றாலே நதி பிறந்து, தவழ்ந்து, ஓடுவது இயற்கை. மலைகள் சார்ந்த தேனி மாவட்டத்திலும் முல்லைப்பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி, மஞ்சளாறு போன்ற ஆறுகள் ஓடுகின்றன.

இந்த ஆறுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த ஆறுகளுக்குள் அவலமான ஒற்றுமை ஒன்று இருக்கிறது என்றால் அது சாக்கடை கழிவு நீர் கலப்பது என்றே சொல்லலாம்.

மாவட்டத்திலுள்ள ஆறுகளின் தற்போதைய நிலையை பற்றி பார்ப்போம்:-

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே தேனி மாவட்ட மக்களுக்கு உடலில் ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்படுவது இயல்பு. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது. இந்த மாவட்டங்களின் வறட்சியை போக்கும் வரப் பிரசாதமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இங்கிலாந்து நாட்டின் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் இந்த அணையை கட்டினார். தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் தேனி வரை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பல பகுதிகளை கடந்து பயணித்து குன்னூர் அருகே வைகை ஆற்றுடன் சங்கமிக்கிறது.

லோயர்கேம்பில் தொடங்கி கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூழையனூர், உப்புக்கோட்டை, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி என பல்வேறு பகுதிகளிலும் ஊருக்குள் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும் காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதிகளுக்கான குடிநீர் திட்டங்களும் இந்த ஆற்றில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வைகை ஆறு

வருசநாடு அருகே உற்பத்தியாகும் மூல வைகை ஆறு முருக்கோடை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உட்பட பல்வேறு பகுதிகளை கடந்து தேனி அருகே அரப்படித்தவன்பட்டி பகுதியில் வைகை அணையில் சேர்கிறது. இந்த ஆற்றிலும் பல இடங்களில் சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.

குறிப்பாக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளும், சாக்கடை நீருடன் ஆற்றில் கலக்கிறது. பல மாதங்கள் தண்ணீர் ஓடிய ஆற்றில் சில ஆண்டுகளாக ஓரிரு மாதங்கள் தண்ணீர் ஓடுவதே அரிதாகிவிட்டது. அவ்வாறு தண்ணீர் வரும் நாட்களில் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கழிவுகளோடு ஆற்றில் நீரில் மிதந்து வருகின்றன. இதனால் ஆற்றின் வளம் கெட்டுப் போகிறது.

கொட்டக்குடி ஆறு

போடி அருகே கொட்டக்குடி பகுதியில் கொட்டக்குடி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு போடி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி, கோடாங்கிபட்டி, பூதிப்புரம், ஆதிபட்டி, பழனிசெட்டிப்பட்டி பகுதிகளை கடந்து தேனி பங்களாமேட்டில் முல்லைப் பெரியாற்றுடன் சங்கமிக்கிறது. இந்த ஆறுபடும் அவலத்துக்கு அளவே கிடையாது என்று கூறலாம்.

கொட்டக்குடி பகுதியில் இந்த ஆற்று தண்ணீர் இளநீர் போல் சுவையாய் இருக்கும். கண்ணாடி போல் பளிச்சிடும். மலை கிராமங்களை கடந்து போடி நகருக்கு வந்த பிறகு சாக்கடை கழிவு நீர் கலக்கத் தொடங்கி விடுகிறது. அங்கிருந்து தேனி வரை உள்ள ஊர்களில் இருந்து சாக்கடை கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. மழை பெய்யாத காலங்களில் இந்த ஆற்றுப்பக்கம் சென்றாலே குமட்டல் எடுக்கும் வகையில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஆற்றின் மூலம் புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்த இந்த கழிவுநீர் பெரும் தடங்கலாக உள்ளது.

வராகநதி

பெரியகுளம் நகர் வழியாக வராகநதி செல்கிறது. பெரியகுளத்தை தென்கரை, வடகரை என இந்த நதியை வைத்தே நிலப்பரப்பு பிரிக்கப்பட்டுள்ளது. வராக நதியை மீட்போம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த நதி முழுமையாக சுத்தம் செய்யும் பணி நடந்தது. தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு நதியை பார்க்கவே அழகாய் காட்சியளித்தது. ஆனால் அவையெல்லாம் சில காலம் தான். ஆற்றை சுத்தப்படுத்திய போதிலும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்கவில்லை. இதனால் மீண்டும் ஆறு, பழைய நிலைக்கு மாறியிருக்கிறது.

இவ்வாறு தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் ஆற்றின் வளம் கெட்டுப் போகிறது. ஆறுகளில் குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்வதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஏனெனில் பல இடங்களில் முறையான சுத்திகரிப்பின்றி ஆற்றுத் தண்ணீர் நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தேனி, பழனிசெட்டிபட்டி, போடி, பெரியகுளம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு இன்னும் முழுமையாக இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் ஆறுகளில் கலப்பது தொடர்கிறது. எனவே, ஆறுகளில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கழிவுநீர் கால்வாய் அமைக்கலாம்

கூடலூரை சேர்ந்த பிரகாஷ்:- கூடலூர் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெற்கு பகுதியில் காந்திகிராமம் வழியாக வயல்வெளிகளில் கலக்கிறது. வடக்கு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெரு வழியாக குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. ஆற்றுக்குள் செல்லும் தண்ணீரை சுத்திகரித்து ஏலசு குளத்துக்கு திருப்பி விட்டால் விவசாயத்துக்கு பயன்படும். பாசன வசதியும் அதிகரிக்கும். எனவே, ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளம் நகர் நலச்சங்க செயலாளர் அன்புக்கரசன்:- பெரியகுளத்தில் பாதாள சாக்கடை இணைப்பு இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வராகநதியில் கலக்கிறது. எனவே, ஆற்றின் கரையோரம் கழிவுநீர் செல்வதற்கு தனியாக வாய்க்கால் அமைக்கலாம். அவற்றை பெரியகுளம் நகருக்கு வெளியே நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திருப்பி சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். வராகநதியில் இருந்து தான் பெரியகுளம், ஜெயமங்கலம், வடுகபட்டி உள்பட பல பகுதிகளுக்கு உறைகிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இயற்கை முறையில் சுத்திகரிப்பு

மயிலாடும்பாறையை சேர்ந்த குணசேகரன்:- முன்பெல்லாம் தெருக்களில் மண் சாலைகள் இருக்கும். சாக்கடை கால்வாயின் தரைப்பகுதியில் சிமெண்ட் பூச்சி இல்லாமல் மண் தரையாக இருக்கும். கால்வாய்க்கு வரும் தண்ணீர் நிலத்திற்கு அடியில் சென்று விடும். சாக்கடையில் தேங்கும் குப்பைகள் அவ்வப்போது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தூர்வாரப்படும். நாகரிக வளர்ச்சி காரணமாக சாக்கடை கால்வாயில் தரைப்பகுதி சிமெண்ட் கலவையால் பூசப்பட்டது. இதனால் தண்ணீர் பூமிக்கு அடியில் செல்வது தடைபட்டது. அத்துடன் பிளாஸ்டிக் குப்பைகளும் சாக்கடை கால்வாயில் வீசப்படுவதால் கழிவுநீர் ஓட்டமும் தடைபட்டது. இதனால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டாலும் கழிவுநீர் அருகில் உள்ள நீர் நிலைகளை நோக்கி திருப்பி விடப்பட்டன. இதன் விளைவால் தற்போது ஆறுகள் சீர் கெட்டுப் போகும் நிலைமை உருவாகி இருக்கிறது. எனவே, தற்போதைய சூழலில் ஆறுகளில் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் அமைத்தோ, இயற்கை முறையிலோ சுத்திகரிப்பு செய்யலாம். ஆற்றுக்கு சற்று தொலைவில், கம்பி வலை அமைத்து குப்பைகளை தடுக்கலாம். அதன்பிறகு 2 அல்லது 3 தொட்டிகள் அடுத்தடுத்து அமைத்து கற்கள், ஆற்றுமணல் மூலம் சாக்கடை கழிவுநீரை வடிகட்டி, ஓரளவு தூய நீராக ஆற்றில் கலக்கச் செய்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story