ரெயில் நிலையம் முன்பு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்


ரெயில் நிலையம் முன்பு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
x

கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு சாலையில் பெருக்கெடுத்து பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு சாலையில் பெருக்கெடுத்து பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரெயில் நிலையம்

கும்பகோணம் ரெயில் நிலையம் 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் நகரமான கும்பகோணம் பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல ரெயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி தினமும் ஏராளமானவர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகளும் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறி பிற மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

சாலையில் கழிவுநீர்

கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழி ஒன்று உள்ளது. இந்த குழியில் இருந்து நேற்று கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

இதன் காரணமாக, ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவு நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்..

சுகாதார சீர்கேடு

இந்த சாலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் தெளிக்கிறது. மேலும், ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும், இனி வரும் காலங்களில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story