வேடசந்தூரில் தொழிற்சாலை கழிவுநீர் குடகனாற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்


வேடசந்தூரில் தொழிற்சாலை கழிவுநீர் குடகனாற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
x

வேடசந்தூரில் தொழிற்சாலை கழிவுநீர் குடகனாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்று குடகனாறு பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திண்டுக்கல்

வேடசந்தூர் குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் டி.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் இன்று திண்டுக்கல்லில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேடசந்தூர், கிரியம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கோட்டைமேடு, காக்காத்தோப்பு பிரிவு, நாகம்பட்டி, கருக்காம்பட்டி, மினுக்கம்பட்டி பிரிவு, அய்யர்மடம், விருதலைப்பட்டி, ரெங்கநாதபுரம், கல்வார்பட்டி, சேணன்கோட்டை, சீத்தமரம் நால்ரோடு, சுள்ளெறும்பு நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தனியார் நூற்பாலை மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீர் மற்றும் திடக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் அருகில் உள்ள குளங்களிலும், குடகனாற்றிலும் கலந்து வருகிறது. இதனால் குடகனாற்றில் மாசு ஏற்பட்டு வருவதுடன், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே குடகனாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழவுநீரை, அந்தந்த தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி மூலம் அவர்களே பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story