வீடு- வணிக நிறுவனங்களில் கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்ய வேண்டும்
வீடு- வணிக நிறுவனங்களில் கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்ய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழ்வேளூர் பேரூராட்சி 15-வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பேரூராட்சியில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்ய வேண்டும். பேரூராட்சி உரிமம் பெற்ற தனியார் ஒப்பந்ததாரர்கள், நவீன எந்திரங்கள் கொண்டு பயிற்சி பெற்ற பாதுகாப்பு கவச உடை அணிந்த பணியாளர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கழிவறை நச்சு தொட்டிகளில் உள்ளே யாரும் விழுவதை தடுக்க அதன் உறுதி தன்மை குறித்து அறிக்கை அளிக்க கேட்டு வீடு வீடாக அறிவிப்பு அளிக்கப்பட உள்ளது. கழிவுநீர் தொட்டிகள் சேதமடைந்திருந்தால் அதை சீரமைத்து கொள்ள வேண்டும். காற்று கம்பத்தில் கொசுக்கள் உள்ளே புகாதவாறு வலை கட்ட வேண்டும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.