பாதியில் நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி


பாதியில் நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி
x

விருத்தாசலத்தில் பாதியில் நின்றுபோன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியால் கழிவுநீர் மணிமுக்தாற்றில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

கடலூர்

விருத்தாசலத்தில் 33 வார்டுகள் உள்ளன. நகரப்பகுதியில் நிலவும் மக்களின் பிரச்சினைகளை வாரந்தோறும் (புதன்கிழமை) வார்டு வாரியாக அலசி வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 16-வது வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

இந்த வார்டில் இந்திரா நகர், இந்திரா நகர் விரிவாக்கம், கடலூர் சாலை, செல்லியம்மன் கோவில் தெரு, கஸ்பா காலனி, அபுல்கலாம் ஆசாத் வீதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 1028 ஆண் வாக்காளர்களும், 1105 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

நகரின் பல இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இந்த வார்டு வழியாக சென்று மணிமுக்தாற்றில் கலக்கிறது. இதனால் மணிமுக்தாறு பாழாகிறது. எனவே கழிவுநீரை சுத்திகரித்து மணிமுக்தாற்றில் விட திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி செல்லியம்மன் கோவில் அருகில் மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலக்கும் இடத்தில் கழிவுநீரில் கலந்து வரும் குப்பை கழிவுகள், கசடுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதன்பிறகு மணிமுக்தாற்றில் கலக்கும் வகையில் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இந்த பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமலேயே பிளாஸ்டிக் கழிவுகளுடன் குப்பைகழிவுகள் சேர்ந்து மணிமுக்தாற்றில் கலக்கிறது. இந்த திட்டம் முழுமைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் சாலையில் இருந்து செல்லியம்மன் கோவில் செல்லும் வழியில் சிமெண்டு சாலை உள்வாங்கியுள்ளது. இது தெரியாமல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து செல்கிறார்கள்.

ஒரே வார்டில் 4 டாஸ்மாக் கடைகள்

விருத்தாசலத்தில் ஒரே வார்டில் 4 டாஸ்மாக் கடை உள்ள வார்டு, இந்த வார்டுதான். இங்கு மதுவாங்கி குடிக்கும் மதுபிரியர்கள், போதை தலைக்கு ஏறியதும் ஆபாசமாக பேசுவதோடு அந்த வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கிறார்கள். வங்கிகள், அரசு பள்ளிக்கூடம், காய்கறி மார்க்கெட், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சப்-கலெக்டர் அலுவலகம், வர்த்தக நிறுவனங்கள் உள்ள இந்த பகுதியில் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது.

மின்கம்பத்தின் பரிதாப நிலை

கரூர் வைஸ்யா வங்கி முன்பு அமைந்துள்ள இரும்பிலான மின் கம்பம் துருப்பிடித்து முழுவதும் அரித்து போய் உள்ளது. மின்கம்பிகளின் தாங்குதலில் நிற்கும் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம்.

இந்த வார்டில் 20 ஆண்டுகளாக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இந்திரா நகரில் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வார்டு மக்கள் கூறுகிறார்கள். அது பற்றி பார்ப்போம்.

பயன்படாத கழிவறை

கஸ்பா காலனி அகிலா:-

கஸ்பா காலனி மக்களுக்காக கட்டப்பட்ட பொதுகழிவறை, பல ஆண்டுகளாக பயன்படாமல் பூட்டியே இருக்கிறது. இதனால் சிலர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். குறுகிய கால்வாயில் கழிவுநீர் ஓடாமல் தேங்கியே நிற்கிறது. சிமெண்டு சாலைகளும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே புதிய கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. ஆனால் அவற்றில் இருந்து அள்ளப்படும் குப்பைகள் குவியல், குவியலாக குவித்து வைக்கப்படுகிறது. அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

படகு குழாம் மீண்டும் செயல்படுமா?

ஆழ்வார் கடலூர் சாலை:-

தனியார் கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கும், நூலகத்திற்கும் தனி கட்டிடம் கட்டி தர வேண்டும். பொழுது போக்க சிறந்த அம்சங்கள் எதுவும் இல்லாததால் தெப்பக்குளத்தை சீரமைத்து ஏற்கனவே செயல்பட்டு வந்த படகு குழாமை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். விளையாட்டு மைதானம், பூங்கா வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். இந்த வார்டுக்கு என்று தனியாக குடிநீர் தொட்டி அமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

சுகாதார சீர்கேடு

சுதா, இந்திரா நகர்:-

எங்கள் பகுதியில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நாங்கள் கோரிக்கை விடுக்கும் போது மட்டும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும், சில நாட்களில் மீண்டும் எங்கள் பகுதியில் பன்றிகள் உலா வருவதும் வாடிக்கையாகி விட்டது.

நகராட்சி மூலம் பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்ய வில்லை. இதனால் மக்கள் பலர் குடிநீர் கிடைக்காமல் பக்கத்து வார்டுகளுக்கு செல்கிறார்கள். எனவே நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாக உள்ளன. கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. அதனால் கழிவுநீர் கால்வாய்களுடன், சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.

வார்டு கவுன்சிலர் கூறுவது என்ன?

வார்டு கவுன்சிலர் தீபா மாரிமுத்து (தி.மு.க.):-

நகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகிக்கப்படும். வீதிகள் அனைத்து பகுதியிலும் குப்பை கழிவுகள் தினந்தோறும் அள்ளப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் கழிவுநீர் கால்வாய்களுடன் கூடிய தர்சாலை, சிமெண்ட் சாலை அமைக்கவும், இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்-அப் குழு மூலம் தெரிவிக்கப்படும் பொதுமக்களின் குறைகளை நகரமன்ற தலைவர் உடனடியாக நிவர்த்தி செய்து தருகிறார். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்துத்தரப்படும்.


Next Story