கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு
ராணிடெக் நிறுவனத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு வசதியை கலெக்டர் திறந்துவைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் உள்ள ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டு, பூஜ்ஜிய கழிவு நீர், புதிய சமன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு திறப்பு விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அதிக அளவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள ராணிப்பேட்டையில்ராணி டெக் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையம் இல்லையென்றால் இப்பகுதி மிகவும் மோசமாக பாதிப்படைந்து இருக்கும். மேலும் அதிகப்படியான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த சிறப்பான கட்டமைப்பை மேம்படுத்தி இப்பகுதியின் சுற்றுச்சூழலை பெருமளவு காத்திடும் பணியை செய்த இவ்விடத்திற்கு பசுமை விருது வழங்கப்பட்டுள்ளது. இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் பூமியில் வாழ முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க அனைவரும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும். அதேபோல் அதிக அளவு மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இதனை முறையாக செய்தால் கட்டாயம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இதனை அனைத்து தொழில் நிறுவனங்களும் மனதில் வைத்து செயலாற்ற வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சுற்றுச்சூழல் இணைப் பொருளாளர் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், ராணி டெக் தலைவர் ரமேஷ் பிரசாத், சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குனர் ஜபருல்லா, மேலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.