பள்ளி அருகே தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றம்
பள்ளி அருகே தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றம்
வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை வசதி இல்லாமல் சாலையோரம் பல்வேறு பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேக்கம் அடைந்து காணப்பட்டிருந்தது. இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தி எதிரொலியாக நேற்று திருக்குமரன் நகர், மூகாம்பிகை நகர், பல வஞ்சிபாளையம், சிவசக்தி நகர், அப்பாவு நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதற்கு பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் இது குறித்து 57-வது வார்டு கவுன்சிலர் கவிதா கண்ணன் கூறுகையில் "சாக்கடை கால்வாய் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி மிக குறைவாக உள்ளது தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தில் இதற்காக நிதியும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். விரைவில் கழிவுநீர் தேக்கமடையும் இடங்களை தேர்வு செய்து கழிவுநீர் தேக்கம் அடையாதவாறு பணியில் தொடங்க உள்ளோம். மூகாம்பிகை நகர், சிவசக்தி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மேடும்,பள்ளமுமாக இருப்பதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது வெளியேற முடியாமல் அதே பகுதியில் தேக்கமடைகிறது. இதற்கு முழுமையான தீர்வு காண்பதற்கான வழிமுறைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.