ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
சாத்தான்குளம் அருகே நடந்த கூட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரத்தை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே நடந்த கூட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரத்தை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தெருமுனை பிரசார கூட்டம்
ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி முன்னிலை வகி்த்தார். தலைமை கழக பேச்சாளர் மண்ணை இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
நலத்திட்ட உதவி
விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, 410 பேருக்கு தையல் எந்திரம், கிரைண்டர் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பிளஸ்-2 முடித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வருகிற காமராஜர் பிறந்த நாளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வரஉள்ளார். தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. பா.ஜ.க.வினர் சாதி, மதம் கூறி மக்களை பிரிக்க திட்டம் வகுக்கின்றனர். திராவிட கொள்கை அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்புகிறது. எல்லோரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது திராவிட நாடு. இங்கு சாதி, மதத்தை வைத்து யாராலும் பிரிக்க முடியாது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க.வினர் எந்த மாநிலத்திலும் இந்துகளுக்கு ஒன்றும் செய்யவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப்பிக்க ரூ.300 கோடியும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பவுர்ணமி தோறும் 12 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்திட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை மூலம் 3000 ஏக்கர் இடம் மீட்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்களுக்காக உழைக்கின்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில மாணவரணி அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய தி.மு.க. செயலர்கள் ஜோசப், பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குரும்பூர்
குரும்பூர் பஜாரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் இளங்கோ, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், தென்திருப்பேரை நகரப்பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.