மார்த்தாண்டம் அருகே டாக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் மனு
மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை, டாக்டர் உள்பட 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை, டாக்டர் உள்பட 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் புகார் மனு கொடுத்தார்.
பாலியல் பலாத்கார புகார்
மார்த்தாண்டம் அருகே பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த 37 வயது இளம்பெண் ஒருவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். நான் தங்கியிருக்கும் பகுதியில் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையின் டாக்டருக்கும், எனக்கும் சுமார் 8 மாத காலம் நட்பு ரீதியாக பழக்கம் உண்டு. இதை பயன்படுத்தி அவர் என்னை பலமுறை தொட முயற்சித்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் சம்பவத்தன்று காலை எனது ஆடைகளை கிழித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
உயிருக்கு பாதுகாப்பு
நான் அவரது கையை தட்டி விட்டு ஓட முயன்ற போது என்னுடைய முகத்தின் இடது புருவத்தில் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் எனது இடதுகண் புருவத்திலும், கண்ணைச் சுற்றியும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த டாக்டரும், அவருடன் இருந்த கண்டால் தெரிந்த 2 நபர்களும் சேர்ந்து என்னை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்கள். இதில் எனது உடலில் வயிறு உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கொல்லாமல் விட மாட்டோம் என்று என்னை மிரட்டினார்கள். நான் எனது உயிருக்கு பயந்து அங்கிருந்து வந்து விட்டேன். அதன் பிறகு வெட்டுமணியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு, மறுநாள் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். இதுதொடர்பாக அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அது மனுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே எதிரிகளின் சட்டவிரோத செயலுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.