பாலியல் புகார்: கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்


பாலியல் புகார்: கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
x

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (வயது 34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து சென்றனர். திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், பாலியல் தொல்லை புகாரில் கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story