10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஓமலூர் அருகே ஷாம்பு வாங்க வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்
ஓமலூர் அருகே ஷாம்பு வாங்க வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
10 வயது சிறுமி
ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கட்டிக்காரனூரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 51). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை கருப்பண்ணன் மளிகை கடைக்கு 10 வயது சிறுமி ஒருவர் ஷாம்பு வாங்குவதற்காக வந்தாள்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கருப்பண்ணன் அந்த சிறுமியை அழைத்தார். பின்னர் அவர் வீட்டின் அலமாரியில் இருக்கும் உளியை எடுத்து தரும்படி சிறுமியிடம் கூறினார்.
பாலியல் தொல்லை
இதனால் சிறுமி வீட்டுக்குள் சென்றபோது, கருப்பண்ணனும் அவளை தொடர்ந்து சென்றார். அங்கு உளி தனக்கு எட்டவில்லை என்று கூறிய சிறுமி, வீட்டுக்கு செல்ல முயன்றாள். அப்போது கருப்பண்ணன் தூக்கி விடுகிறேன் என்று கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பிய சிறுமி, தனது வீட்டுக்கு சென்று, இதுபற்றி தாயிடம் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மளிகை கடைக்காரர் கருப்பண்ணனை கைது செய்தார்.
ஷாம்பு வாங்க வந்த சிறுமிக்கு மளிகை கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.