சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் தனது தம்பியுடன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காதல்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் சிறுமியின் உறவினரான 21 வயது வாலிபர் அந்த சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றதை அறிந்த அந்த வாலிபர் சிறுமியின் வீட்டின் கதவை திறக்கக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் பீதியடைந்த அந்த சிறுமி சத்தம்போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
சிறையில் அடைப்பு
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி இரவு 7.30 மணியளவில் அந்த வாலிபரும், அவருடைய தம்பியும் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மற்றும் அவரது தம்பி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.