பழனி கிரிவீதியில் நிழற்பந்தல் அமைப்பு
பக்தர்கள் நலனுக்காக, பழனி கிரிவீதியில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில், அடிவாரம், கிரிவீதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி வெளிப்பிரகாரத்தில் 'கூலிங் பெயிண்ட்' அடிக்கப்பட்டது. இந்நிலையில் அடிவாரத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனுக்காக வடக்கு கிரிவீதியில் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அடிவாரம் கிரிவீதிகளில் பந்தல் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.