திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஊருக்கு வெளியே கட்டப்படும் சஷ்டி மண்டபம் -பக்தர்களுக்கு வசதியாக அமையுமா?
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஊருக்கு வெளியே கட்டப்படும் சஷ்டி மண்டபத்துக்கு பக்தர்களுக்கு வசதியாக அமையுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஊருக்கு வெளியே கட்டப்படும் சஷ்டி மண்டபத்துக்கு பக்தர்களுக்கு வசதியாக அமையுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சஷ்டி விரதம்
தேவர்களை வாட்டிய சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு தேவர்களின் போர்படை தலைவன் இந்திரன் தனது மகளான தெய்வானையை மணமுடித்து தந்தார். முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பினும் தெய்வானையை திருமணம் செய்த திருத்தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் (தீபாவளிக்கு மறுநாளில் இருந்து) சுக்கல பட்சபிரதமையில் 6 நாட்கள் சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது.
மாதத்தில் 15 நாளுக்கு ஒருமுறை சஷ்டி வந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடிய கந்தசஷ்டி நாளில் விரதம் இருப்பதுதான் சிறப்பு. சஷ்டியில் விரதம் இருந்தால் தீராத நோய்கள் தீரும், திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வந்தபோதிலும் பக்தர்கள் காப்புகட்டி 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்ககூடிய திருவிழாவாக கந்தசஷ்டி திருவிழா அமைகிறது.
பக்தர்கள் சிரமம்
அவ்வாறு விரதம் இருக்ககூடிய பக்தர்கள் அனைவரும் காலையிலும், மாலையிலுமாக சரவண பொய்கையில் நீராடி கிரிவலம் வருவார்கள். கடந்த பல ஆண்டுகளாக பக்தர்கள் கோவிலுக்குள்ளே தங்கி இருந்து விரதம் கடைபிடித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர். ஒவ்வொரு ஆண்டிலும் விரதமிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல், தங்குவதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வளாகத்தில் சிறிய அளவில் ஒரு சஷ்டி மண்டபம் கட்டப்பட்டது. இருப்பினும் போதிய இடவசதி இல்லாத நிலையே தொடர்ந்தது. எனவே பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இடவசதி இன்றி 7 நாளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய நிலையில் விரதம் இருந்து வந்தனர்.
2 கி.மீ. தொலைவில்
இதற்கிடையில் கோவில் வெளிபிரகாரத்தில் வள்ளி தேவசேனா திருமண மண்டபம் முன்பு உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக மேல் கூரை வசதி ஏற்படுத்தப்பட்டு விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள பாலாஜிநகர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.5 கோடியே 70 லட்சத்தில் புதிதாக சஷ்டி மண்டபம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணி தொடங்கி நடந்துவருகிறது.
இதுகுறித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறும்போது:- சஷ்டி மண்டபம் கட்டுவது பக்தர்களுக்கு வசதியாக அமைய வேண்டும். பாலாஜி நகர் நுழைவுவாயில் சஷ்டி மண்டபம் கட்டுவதை தவிர்த்து கோவில் வளாகம் அல்லது கிரிவல பகுதியில் சஷ்டி மண்டபம் கட்ட வேண்டும்.
கிரிவல பாதையில் அமைக்கலாம்
திருப்பரங்குன்றம் நகர்மன்ற முன்னாள் தலைவர் காந்திமதி:- நகர மன்ற தலைவராக இருந்த போது கோவிலில் சஷ்டிவிரதம் இருக்ககூடிய பக்தர்களுக்கு வசதியாக சஷ்டி மண்டபம் கட்டவேண்டும் என்று எண்ணியது உண்டு. அதிகாரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன். தற்போது சஷ்டி மண்டபம் கட்டபோவதை வரவேற்கிறேன். அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஊருக்குள் சஷ்டி மண்டபம் அமைவதுதான் விரதமிருக்கும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
முன்னாள் அறங்காவலர் பெரியசாமி:- கோவிலில் சஷ்டி விரதம் இருக்கக்கூடிய பக்தர்களுக்கு சஷ்டி மண்டபம் கட்டுவது வரவேற்கத்தக்கது. சஷ்டிமண்டபம் கட்டுவதற்கு முன்வந்த தமிழக அரசுக்கு நன்றி. பெண் பக்தர்கள் ரோடு, பாலம் கடந்து புதிதாக கட்டப்பட உள்ள இடத்திற்கு வந்து செல்வது சிரமமாகும். ஆகவே கிரிவல பாதையில் சஷ்டி மண்டபம் கட்டுவதே சாத்தியமாகும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு மண்டபம்
கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ்:- சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை அமைந்துள்ள இடத்தில் சஷ்டி மண்டபம் கட்டுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆகவே பணி தொடங்க உள்ளது. கோவில் வளாகத்திலும், சரவண பொய்கை வளாகத்திலுமாக சஷ்டி பக்தர்களுக்கு வசதியாக தேவைக்கு ஏற்ப மேற்கூரை வசதி செய்யப்படும். பாலாஜி நகர் பகுதியில் அமையும் சஷ்டி மண்டபமானது குறிப்பிட்ட 7 நாட்களை தவிர்த்து சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக அமையும். இனிவரும் காலத்தில் கிரிவல பாதையில் இடவசதி, நிதி வசதியை பொறுத்து மேலும் ஒருசஷ்டி மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.