சாயாவனேஸ்வரர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டப்படுமா?


சாயாவனேஸ்வரர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகாரில் உள்ள சாயாவனேஸ்வரர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகாரில் உள்ள சாயாவனேஸ்வரர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காசிக்கு இணையான.....

பூம்புகார் அருகே சாயாவனத்தில் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இது காசிக்கு இணையான ஆறு கோவில்களில் முதன்மையான கோவிலாகும். இந்தக் கோவிலில் உள்ள குளத்தை யானை வெட்டியதால் இது ஐராவத தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இயற்பகை நாயனார் முக்தி அடைந்த கோவிலாகும்.மேலும் கண்ணகி, கோவலன், நால்வர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முனிவர்கள் மற்றும் ஞானிகள் வழிபட்ட இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோவிலில் நந்தவனம் உள்ளது. இந்த நந்தவனத்தில் தினந்தோறும் சுவாமிக்கு பூஜைக்கு பயன்படும் பூக்கள், வில்வம், சரக்கொன்றை உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சுவர்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நந்தவனத்தில் ஒரு பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து கீழே விழுந்து விட்டது. இதன் காரணமாக நந்தவனத்தில் உள்ள பூச்செடிகளை ஆடு, மாடுகள் தினந்தோறும் மேய்ந்து வருகின்றன. இதனால் கோவிலில் சாமிக்கு பூஜை செய்ய பூக்கள் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நந்தவன சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story