கிடப்பில் போடப்பட்ட கிரிக்கெட் மைதான பணி
மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்ட கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணியால் பயிற்சி பெற முடியாமல் இளைஞர்கள் குமுறுகின்றனர்.
சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது
பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு மகளிர் விளையாட்டு விடுதி எதிரே கடந்த 2016-ம் ஆண்டு அப்போது இருந்த கலெக்டரால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நெட் பிளே, பாா்வையாளா்கள் அமரும் கேலரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. பின்னா், அந்த கலெக்டர் இட மாற்றம் செய்யப்பட்டதால் மைதானம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மைதானம் அமைக்கும் பணியை தொடர வலியுறுத்தி விளையாட்டு வீரா்களும், சமூக ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு
தற்போது மைதானத்தில் செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்கள் வளா்ந்து ஆக்கிரமித்து அடர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும், இரவு நேரத்தில் அந்த மைதானம் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. ஆனாலும் அந்த மைதானத்தில் செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்கள் வளராத பகுதியில் வாரந்தோறும் இளைஞர்களில் சிலர் ஆர்வத்துடன் வந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அருகே உள்ள மாவட்டத்துக்கும், தனியார் நிலங்களுக்கும் சென்று கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.
பல்வேறு வசதிகளுடன்...
இதுகுறித்து கிரிக்கெட் விளையாடும் இளைஞா்கள் கூறுகையில், இந்த கிரிக்கெட் மைதானத்தை கட்டி முடிக்க வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மைதானம் இல்லாததால் பயிற்சி பெறுவது சிரமமாக உள்ளது. எனவே, மைதானத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றி நெட் பிளே, பாா்வையாளா்கள் அமரும் கேலரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.