கைதான 3 பேர் குறித்து அதிர்ச்சி தகவல்கள்


கைதான 3 பேர் குறித்து அதிர்ச்சி தகவல்கள்
x

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த விவகாரத்தில் கைதான 3 பேர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்தது அம்பலமாகி உள்ளது.

தர்மபுரி

மொரப்பூர்

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த விவகாரத்தில் கைதான 3 பேர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்தது அம்பலமாகி உள்ளது.

ரகசிய தகவல்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வகுத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாக்கம்மாள் (வயது 56). பாளையம் புதூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு உதவியாளராக இவர், கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு பணியில் இருந்து நின்று விட்டார். பணியில் இருந்த போது கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து கூறும் சிலருடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி பல பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து தெரிவிக்கும் செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். வகுத்தானூர் பகுதியில் உள்ள சாக்கம்மாள் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கருவில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்து தெரிவிக்கும் சோதனையை சிலர் செய்வதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

ரூ.25 ஆயிரம் வசூல்

அப்போது மொபைல் ஸ்கேனர் கருவி மூலம் கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கவியரசன் (28), அவருக்கு உதவிய அய்யனார் (34) ஆகியோர் சிக்கினார்கள். இது தொடர்பாக மருத்துவத் துறையினர் அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து சாக்கம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிய ஒருமுறை சோதனை செய்ய ரூ.25 ஆயிரம் வரை வசூல் செய்திருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி தகவல்கள்

டிப்ளமோ பார்மசி படித்துள்ள கவியரசன், இந்த சட்டவிரோத செயலில் சாக்கம்மாள் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார். இவ்வாறு பரிசோதிக்கும் போது கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிய வந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது.

அதாவது, கருக்கலைப்புக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது, டாக்டர்களிடம் பேசி கருக்கலைப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் இவர்கள் செய்துள்ளனர்.அப்படி கருக்கலைப்பு செய்தவர்கள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் அடைப்பு

எனவே இந்த விவகாரத்தில் இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கவியரசன், அய்யனார் ஆகியோர் அரூர் சிறையிலும், சாக்கம்மாள் சேலம் மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


Next Story