பூந்தமல்லி ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்
பூந்தமல்லியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தன்னைத் தீர்த்து கட்ட நினைத்ததால் முன்கூட்டியே தீர்த்து கட்டியது அம்பலமானது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (என்ற) ஸ்டீபன் ராஜ் (வயது 22), தனியார் இன்டர்நெட் வயர் பதிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று இவரது நண்பர் ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது,
இதில் வெள்ளவேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த வழக்கில் ஸ்டீபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வந்துள்ளார். இவரது ஆதரவாளர்கள் தற்போது சிறையில் உள்ள நிலையில் ஏரியாவில் தன்னை பெரிய ரவுடியாக காட்டி கொள்ள வலம் வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கு எதிர் தரப்பாக உள்ள எபி (என்ற) எபினேசர் வீட்டிற்கு சென்று அவனது தலையை துண்டாக எடுத்து விடுவேன் என அவரது பெற்றோரிடம் ஸ்டீபன் எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தன்னை ஸ்டீபன் கொலை செய்து விடுவானோ என்றும் தன்னையே மிரட்டி விட்டு சென்ற ஸ்டீபனை தீர்த்து கட்ட எபினேசர் முடிவு செய்து அவருக்கு முன்பாக ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்து எபினேசர் தனது ஆதரவாளர்களுடன் நோட்டமிட்டு ஸ்டீபனை வெட்டி படுகொலை செய்து இருப்பது தெரியவந்தது.
தற்போது தலைமுறைவாக உள்ள எபினேசர் அவரது கூட்டாளிகள் உட்பட ஆறு பேரை பூந்தமல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வரும் நிலையில் தற்போது நான்கு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.