'ஷாக்' அடிக்கும் புதிய கட்டண 'பில்' மின்சார கட்டண உயர்வால் பொருளாதார சுமை : புலம்பி தவிக்கும் பொதுமக்கள்


ஷாக் அடிக்கும் புதிய கட்டண பில்  மின்சார கட்டண உயர்வால் பொருளாதார சுமை :  புலம்பி தவிக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சார கட்டண உயர்வால் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

தேனி

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.

அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது.

கடனில் தத்தளிப்பு

மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடிக்கு கடனில் தத்தளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டியது கட்டாயமாகி விட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தாலும் மின்கட்டண உயர்வு 'ஷாக்' தருவதாக உணர்ந்து இருக்கும் பொதுமக்கள், கட்டணம் வசூலிக்கும் முறையையாவது மாற்றி அமைக்கக்கூடாதா? என்ற மனநிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது.

200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.225 வசூலிக்கப்படுகிறது.

400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.1,125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதந்தோறும் கணக்கிடும் முறை

2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

ஏன் என்றால்? உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மாதத்திற்கு 100 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்?

தற்போது அவர் ரூ.225 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.

ஒருவர் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு மாதத்திற்கு 200 யூனிட் வரை தேவைப்படுகிறது என்பதுதானே பொருள்.

தற்போது 400 யூனிட்டுக்கு அவர் ரூ.1,125 செலுத்த வேண்டும். மாதந்தோறும் கணக்கிடும் முறை வந்தால் அவர் ரூ.225 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால்தான் மாதந்தோறும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

ஓட்டல் தொழில் பாதிப்பு

இதுபற்றியும், மின்சார கட்டண உயர்வு பற்றியும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கம்பத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேந்திரன்:-

விலைவாசி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வால் ஏற்கனவே ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது மின் கட்டண உயர்வும் பாதிப்பை கொடுத்துள்ளது. இதனால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 8 ஆண்டுகளாக மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்துவிட்டு, ஒரே நேரத்தில் மொத்தமாக உயர்த்தியதால் அனைத்து தரப்பினரும் பாதிப்பை உணர முடிகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த கட்டண உயர்வு தேவையானதாக பார்த்தாலும், இதர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினால் கூட பாதிப்புகளை சமாளித்துக் கொள்ள வழி கிடைக்கும்.

தேனியை சேர்ந்த என்ஜினீயர் ரிஷி:-

கொரோனா பேரிடர் காலத்தில் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பை சரிசெய்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்ளூர் வணிக நிறுவனங்கள் வரை ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதனால், வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் பலரும் ஓட்டல் உணவுகளை சார்ந்து இருக்க வேண்டியது உள்ளது. புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கும் நிலையில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டனர். தற்போது மின்சார கட்டண உயர்வால் உணவு செலவு, போக்குவரத்து செலவு மட்டுமின்றி வீட்டு வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையாகி உள்ளது. அதே நேரத்தில் மாதாந்திர மின்சார கட்டணம் கணக்கீடு முறையை அமல்படுத்தினால் ஏழை, எளிய மக்கள், வணிகர்கள் தங்களின் பாதிப்புகளில் இருந்து ஓரளவு சரி செய்து கொள்ள முடியும். எனவே, மாதாந்திர மின் கணக்கீடு முறையை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்.

பொருளாதார சுமை

உப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கலையரசி:-

ஏழை, நடுத்தர மக்களுக்கு தான் மின் கட்டண உயர்வு அதிக பாதிப்பை கொடுத்துள்ளது. வீடுகளில் மிக்சி, கிரைண்டரை தினமும் பயன்படுத்தும் நிலைமை தான் உள்ளது. அப்படி பயன்படுத்தினால் மின்சார பயன்பாடு அதிகரித்து விடுகிறது. வெளியிடங்களுக்கு சென்று பணியாற்றுபவர்கள் முன்பு எல்லாம் மதியம் கடையில் சாப்பிட்டுக் கொண்டார்கள். தற்போது வீட்டில் இருந்தே உணவு எடுத்துச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் தங்களின் பாதிப்பை சரி செய்ய அதை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கின்றனர். இதனால், மக்களுக்கு பொருளாதார சுமை அதிகரிக்கிறது. எல்லா வழிகளிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாதாந்திர மின்கட்டண உயர்வை அமல்படுத்தினால், அது ஆறுதலாக அமையும்.

உப்புக்கோட்டையை சேர்ந்த இல்லத்தரசி கார்த்திகை ராணி:-

மின்கட்டணம் உயர்வுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு மின்கட்டணம் ரூ.750 ஆக இருந்தது. தற்போது ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாதம் மின்கட்டண விவரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இனிமேல் மிக்சி, கிரைண்டர் பயன்பாட்டை கைவிட்டு அம்மி, ஆட்டுஉரல் பயன்பாட்டுக்கு மாற வேண்டிய நிலை தான் ஏற்படும். மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தினால் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். அத்துடன் நடுத்தர மக்களுக்கும் நிதிச்சுமை குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story