கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்
பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை:
பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பட்டுக்கோட்டை நகராட்சி, ரெட்கிராஸ் இணைந்து பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு ஊர்வலம் பட்டுக்கோட்டை பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று காலை தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்து பெண்களுக்கு மஞ்சள் பை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நாளை (அதாவது இன்று) முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.10 ஆயிரம் வரை அபராதம்
பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் சிறிய கடைக்காரர்களுக்கு ரூ.1000 அபராதமும், பெரிய கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊர்வலம் பெரியார் சிலையிலிருந்து தொடங்கி பழனியப்பன் தெரு, தலையாரி தெரு, தலைமை தபால் நிலையம் ரோடு, காசாங்குளம் வழியாக நகராட்சி அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகராட்சி பொறியாளர் குமார், நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், டாக்டர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகள் குறித்தும், தொடக்கப்பள்ளியில் பயிலும், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், சக்கரப்பள்ளி ஊராட்சி வாலன் சுலைமான் நகரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை பணிகள் குறித்தும், அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அங்காடியில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவி குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது அவருடன் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தாசில்தார் பூங்கோடி, பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாசர், சக்கராப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா நஸ்ரின், ஒன்றிய கவுன்சிலர் ரெஜியா சுல்தானா, ஊராட்சி செயலாளர் முருகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.