கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
கொள்ளிடத்தில் கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இரு பிரிவு
முன்னதாக, வியாபாரிகள் சங்கத்தினர் இரு பிரிவாக பிரிந்து செயல்பட்டுவரும் நிலையில்,ஒரு தரப்பினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்த கொள்ளிடம் போலீசாரிடம் அனுமதி பெற்று கூட்டம் நடத்தினர். இதனை அறிந்த மற்றொரு தரப்பினர் கூட்டம் நடைபெறும் மண்டப வாசலில் கூடி கூட்டம் நடத்தக்கூடாது என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கொள்ளிடம் கடைத்தெரு வியாபாரிகள் சங்கம் எங்களுடையது,எங்கள் பதிவு எண்ணையும், லோகோவையும் பயன்படுத்தி கூட்டம் நடத்துவதாக இன்ஸ்பெக்டரிடம் குற்றம் சாட்டினர்.
புகார்
அப்போது கடைத்தெரு வியாபாரிகள் சங்க பதிவு எண் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இரு பிரிவினரும் கூட்டம் நடத்தலாம் மேலும் பதிவு எண் குறித்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்யுமாறு கூறினார்.
இதனை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.மேலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.