கடைகள், வணிக வளாகங்கள் வழக்கம்போல் செயல்படும்


கடைகள், வணிக வளாகங்கள் வழக்கம்போல் செயல்படும்
x

கடலூர் மாவட்டத்தில் கடைகள், வணிக வளாகங்கள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

கடலூர்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது.

ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. உறுதி அளித்ததன் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனம் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியும் நடைபெற்றது. இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

முழுஅடைப்பு போராட்டம்

இந்த நிலையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ந் தேதி (அதாவது இன்று) மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவானது.

அதற்கு ஏற்றாற்போல் பா.ம.க.வினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

அனைத்து பஸ்களும் இயங்கும்

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் வழக்கம்போல் இன்று (சனிக்கிழமை) செயல்படும். முழுஅடைப்பு போராட்டம் தொடர்பாக பா.ம.க. நிர்வாகிகளிடம் பேசியுள்ளேன். அவர்களும் யாரையும் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தமாட்டோம் என்றும், விருப்பத்தின் பேரில் கடைகளை அடைத்துக் கொள்ளலாம் என்று தான் அறிவுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளனர்.

அதனால் பஸ்களும் வழக்கம் போல் இயங்கும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வணிக வளாகங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அனைத்து பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது அத்தியாவசிய பணியில் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story