அரசு பள்ளி மாணவர்களுக்கான குறும்படம் விமர்சன போட்டிகள்
மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான குறும்படம் விமர்சன எழுதுதல்-பேசுதல் போட்டி திருவாரூரில் நடந்தது.
மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான குறும்படம் விமர்சன எழுதுதல்-பேசுதல் போட்டி திருவாரூரில் நடந்தது.
தேசிய விருதுகள்
தமிழக அரசு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறந்த மற்றும் தேசிய விருதுகள் பெற்ற குறும்படங்களை திரையிட்டு, மாணவர்களிடம் பல்வேறு வகையிலான தலைப்பிலான போட்டிகளின் கீழ் பின்னூட்டங்களைக் கேட்டு வருகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு வரும் நிலையில் இந்த மாதம் 101 சோத்தியங்கள் எனும் தேசிய விருது பெற்ற மலையாள மொழியின் சிறார் திரைப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து 7 தலைப்புகளின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான போட்டி திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளாகத்தில் நடந்தது.
எழுதுதல்-பேசுதல் போட்டிகள்
இதில் திருவாரூர் மாவட்ட இடைநிலைக் கல்வி பள்ளி துணை ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். பல்வேறு ஒன்றியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். திரைப்பட விமர்சனம் எழுதும் போட்டியில் ஏத்தக்குடி அரசு நடுநிலைப் பள்ளி மாணவி கிரிஜா, மேலதிருமதிக்குன்னம்அரசு நடுநிலைப் பள்ளி மாணவர் செந்தில்நாதன், தண்டலை அரசு நடுநிலைப்பள்ளி மாணவி மவுலிகா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். திரைப்பட விமர்சனம் செய்யும் போட்டியில் தண்டலை அரசு நடுநிலைப்பள்ளி மாணவி பார்கவி, மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் குருதேவ், செட்டிச்சிமிழி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர் விஜய் ஆனந்த் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.
படத்தின் சுவரொட்டி வடிவமைத்தல் போட்டியில் மகாதேவப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நசிகா முதலிடத்தையும், மூவாநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவன் தமிழழகன் 2-ம் இடத்தையும் பிடித்தனர். போட்டியின் நடுவர்களாக கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தங்கபாபு, பட்டதாரி ஆசிரியர் மணிகணேசன், மன்னார்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கலை ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.