தபால் நிலையங்களில் தேசிய கொடி தட்டுப்பாடு
தபால் நிலையங்களில் தேசிய கொடிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதை கடைகளில் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. தபால் நிலையங்களில் தேசிய கொடி தட்டுப்பாடு
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைெயாட்டி, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு கொடி ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடிகளை வாங்கி சென்றதால் ஓரிரு நாட்களில் அனைத்து கொடிகளும் விற்றுத்தீர்ந்தன. கடந்த 2 நாட்களாக தபால் நிலையங்களில் தேசிய கொடி கிடைக்கவில்லை.
இதுகுறித்து தபால் இலாகா அதிகாரிகள் கூறுகையில், ''தேசிய கொடிகள் குறைந்த அளவே விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றுவிட்டனர். இனிமேல் குறைந்த கால அளவே இருப்பதால் கொள்முதல், விற்பனைக்கு சாத்தியமில்லை'' என்றனர். ஆனால் இதை அறியாத பொதுமக்கள் பலர் தினமும் தபால் நிலையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். கடைகளில் அதிக விலை என்றாலும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள்.