நீலகிரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் இல்லாததால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் எரிபொருளுக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தற்போது மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டியில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சாதாரண பெட்ரோல் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களில் பவர் பெட்ரோல் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது.
30 சதவீதம்
இதனால் ஊட்டியில் காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், பச்சை தேயிலை பாரம் ஏற்றும் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட பெட்ரோல் பங்குகள் விற்பனை நிலைய தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:-
நீலகிரியில் 26 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் 15-க்கும் மேற்பட்ட நிலையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிலையங்களில் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
இதற்கு பெட்ரோல், டீசல் வினியோகம் 30 சதவீதம் குறைந்து இருப்பது முக்கிய காரணமாகும். இதனால் பெட்ரோல் உள்ள நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வாகன ஓட்டிகள் அதிகம் பேர் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக காலையில் வேலைக்கு செல்கிறவர்கள், தொலைதூர இடங்களுக்கு போகிறவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது.