கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொலை: மேட்டூர் மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்-சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மேட்டூர் மீனவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

காவிரி ஆற்றில் மீனவர் உடல்

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் (40). மீனவர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 14-ந்தேதி இரவு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களை கர்நாடக மாநில வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் அவர் காயம் அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் சொரிப்பாறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ராஜாவின் உடல் மிதந்தது.

உறவினர்கள் எதிர்ப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாவின் மனைவி பவுனா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் இறந்துபோன ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது உடல் மிதந்த இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் அங்கு பர்கூர் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இதனிடையே, உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்தினர், கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக மேட்டூரில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர். முன்னதாக நேற்று காலை மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. பலியான ராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து ராஜாவின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்தால் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் மற்றும் போலீஸ் தரப்பில் ராஜாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீனவர் ராஜாவின் உடலை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோகுலரமணன், அருண், மகேஷ் ஆகிய 3 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பிரேத பரிசோதனையில் ராஜாவின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை என்றும், உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தகவல் பரவியது. இதை கேள்வி பட்ட ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ராஜாவின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாயவில்லை என்றால், அவர் எப்படி பலியானார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதற்கிடையில் மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நேற்று காலை தமிழக கர்நாடக-எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் கர்நாடக சோதனைச்சாவடி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில மகளிர் அணி தலைவர் முத்துலட்சுமி வீரப்பன் தலைமை தாங்கினார். இதில் சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் வெங்கடாஜலம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் பாலவாடி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் மேட்டூர்- மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் குறித்து முத்துலட்சுமி வீரப்பன் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த துப்பாக்கி சூட்டின் போது உயிர் நீத்த ராஜாவின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும். கர்நாடக வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

மீனவர் ராஜா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் நேற்று 2-வது நாளாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் பதற்றம் நீடித்தது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் சாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள். இதன் காரணமாக தமிழக மற்றும் கர்நாடக அரசு பஸ்கள் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு இயக்கப்படும். இந்த நிலையில் ேமட்டூர் அருகே உள்ள கொளத்தூர் கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா என்ற மீனவர் மீன்பிடிக்க சென்ற போது மான் வேட்டையாடியதாக கூறி கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராஜா உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு மற்றும் கோவிந்தபாடி, காரைக்காடு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலம் ைமசூரு பகுதியில் இருந்து வழக்கமாக மகாசிவராத்திரிக்கு மாதேஸ்வரன்மலை வழியாக மேட்டூருக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

அதே நேரத்தில் மகா சிவராத்திரி விழாவுக்காக மேட்டூர், தர்மபுரி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு வழக்கம்போல தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அதில் நேற்று மதியம் வரை பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தது. அதன்பிறகு மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.

ராஜாவின் மனைவி கண்ணீர் பேட்டி

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராஜாவின் மனைவி பவுனா (வயது 35) கண்ணீர் மல்க கூறியதாவது:-

கடந்த 14-ந் தேதி காலை 11 மணிக்கு எனது கணவர் ராஜாவுடன் 3 பேர் மீன் பிடிக்க சென்றனர். அப்பகுதியில் மீன் அதிகம் கிடைக்கும் என்பதால், அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இளையபெருமாள் மற்றும் ரவி ஆகிய 2 பேரும் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். நிலப்பகுதி வழியே என் கணவர் தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டபின் சித்ரவதை செய்து அவரை கொன்றுள்ளனர். அதற்கான காயம் உடலில் உள்ளது. இந்த உண்மையை மறைக்க எங்கிருந்தோ கொண்டு வந்த மான் இறைச்சியை காட்டி அதை வேட்டையாடியதாக கூறி அவர் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்றவரை சுட்டு பொய் வழக்கு போட்டுள்ளதால் அவரது கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அத்துடன் எனது 3 குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story