உப்பார்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
தேனி அருகே உள்ள உப்பார்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு கூட்டம், தேனியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், முருகன், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி அருகே உப்பார்பட்டியில் சுங்கச்சாவடி கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக சபரிமலைக்கு சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருவார்கள். அத்துடன் சுருளிஅருவி, ஹைவேவிஸ் மற்றும் கேரள மாநிலம் குமுளி, தேக்கடி, வாகமன் போன்ற சுற்றுலா இடங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த சாலை இருவழிச்சாலையாக உள்ளது. இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. பணிகள் முடிவடையாத நிலையிலும், இருவழிச்சாலையாக உள்ளதாலும் இங்கு திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.