''சூதாட்டம் நடத்துகிறவர்களை பாதுகாக்கிற சட்டமாக இருக்கக் கூடாது''
ஆன்லைன் விளையாட்டு தொடர்பான மத்திய அரசின் வரைவு விதிமுறைகள் சூதாட்டம் நடத்துபவர்களை பாதுகாக்கிற சட்டமாக இருக்கக் கூடாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதுகாக்கிற சட்டமாக...
ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் தொடர்பான வரைவு வரையறைகளை மத்திய அரசு வெளியிட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. அதனை நான் முழுமையாக படித்து பார்க்கவில்லை. அதனை படித்து பார்த்த பின்பு தான் கருத்து தெரிவிக்க முடியும். அது ஆன்லைன் சூதாட்டம் நடத்துகிறவர்களை பாதுகாக்கிற சட்டமாகவோ, ஏழை எளிய மக்களிடம் இருந்து வரி வசூல் செய்கிற சட்டமாகவோ இருக்கக்கூடாது என்பது எங்களுடைய நோக்கம்.
முழுவதுமாக ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அது தான் தமிழக அரசின் நோக்கம். அதனை நாங்கள் வலியுறுத்துவோம். மத்திய அரசின் வரையறைகளை படித்து பார்த்துவிட்டு எங்களது கருத்துகளை தெரிவிக்கிறோம்.
கண்டிக்கத்தக்கது
தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதனை அடிப்படையாக வைத்து மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்திருக்குமானால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
அதைவிட்டு ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகிறவர்களை பாதுகாப்பதற்காக மறைமுகமாக ஏதாவது செய்கின்ற செயலாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் முதன்முதலாக புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்துவது உண்டு. அந்த வகையில் வருகிற 6-ந் தேதி அன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்சூரன்சு
ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவித்து நடைமுறைக்கு வந்துவிட்டது. ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சேர்த்து இன்சூரன்சு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.