கடம்பூரில் கடையடைப்பு போராட்டம்
கடம்பூரில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும், உண்ணாவிரதம் இருந்த வியாபாரிகள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
கயத்தாறு:
கடம்பூரில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும், உண்ணாவிரதம் இருந்த வியாபாரிகள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் பயணம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கடம்பூர் மற்றும் அதனை சுற்றி இளவேலங்கால், அயிரவன்பட்டி, தங்கம்மாள்புரம், திருமலாபுரம், குப்பனாபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், அகிலாண்டபுரம், கொத்தாலி, தென்னம்பட்டி, உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் இவர்கள், பஸ் பயணத்தை விட ெரயில் பயணத்தை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை
கொரோனா காலத்திற்கு முன்பு கடம்பூர் ரெயில் நிலையத்தில் பல ரெயில்கள் நின்று சென்றன. தற்போது ஒருசில ரெயில்களை தவிர மற்ற அனைத்தும் நிற்காமல் செல்வதால், நெல்லைக்கு சென்று ெரயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பூரில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, மத்திய ரெயில்வே மந்திரியிடம் ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ணாவிரதம்
இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று கடம்பூர் காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.
கடம்பூரில் முன்புபோல அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்துக்கு வியாபாரிகள் சங்க மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடம்பூர் வியாபாரிகள் சங்க தலைவர் தனசேகரன், வழக்கறிஞர் அய்யலுசாமி, அழகுராஜன், துணை தலைவர்கள் புஷ்பகணேஷ், ராஜேந்திர பாண்டியன், முருகன், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆசீர், ஜெகதீசன், வைரம், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
70 பேர் கைது
இதுபற்றி அறிந்ததும் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், கடம்பூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் விரைந்து வந்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக 5 பெண்கள் உள்பட 70 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் இந்த போராட்டத்தையொட்டி கடம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பஜார் பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.