தலைவாசல் அருகே கள்ளக்காதலி, விவசாயிக்கு அரிவாள் வெட்டு-பெயிண்டர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


தலைவாசல் அருகே கள்ளக்காதலி, விவசாயிக்கு அரிவாள் வெட்டு-பெயிண்டர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x

தலைவாசல் அருகே கள்ளக்காதலி, விவசாயியை அரிவாளால் வெட்டிய பெயிண்டர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே கள்ளக்காதலி, விவசாயியை அரிவாளால் வெட்டிய பெயிண்டர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

தலைவாசல் அருகே வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). விவசாயி. இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரமேஷ் தோட்டத்தில் கல்வராயன்மலை கிராங்காடு கிராமத்தை சேர்ந்த கவிதா (31) என்பவர் கடந்த ஒரு மாதமாக விவசாய கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ரமேஷ் தோட்டத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் தோட்டத்தில் இருந்த கவிதா, ரமேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல்

இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கவிதா சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்தபோது, சென்னை வேளச்சேரியை சேர்ந்த பெயிண்டர் ஜெகனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் அவர்கள் அங்கு குடித்தனம் நடத்தி வந்தனர். இதையடுத்து ஜெகன் மது குடித்து விட்டு வந்து கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டதால், கவிதா அங்கிருந்து தலைவாசல் பகுதிக்கு வந்து விட்டார்.

இதையடுத்து ெஜகன் தனது நண்பர் உதவியுடன் மோட்டார்சைக்கிளில் வரகூருக்கு வந்தார். பின்னர் ரமேஷ் தோட்டத்துக்கு சென்ற ஜெகன், கவிதாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இதற்கு கவிதா மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த ஜெகன் அரிவாளால் கவிதாவையும், தடுக்க வந்த ரமேசையும் வெட்டி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய ஜெகன், அவருடைய நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story