டாக்டருக்கு அரிவாள் வெட்டு
சிவகாசியில் டாக்டரை அரிவாளால் வெட்டினர்.
சிவகாசி,
சிவகாசி பி.எஸ்.ஆர். ரோட்டில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் ஜெயபால் (வயது 67). இவரது ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள நர்சுகளிடம் தகராறு செய்து விட்டு உள்ளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் ஜெயபாலிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் டாக்டர் ஜெயபாலுக்கு தலையில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் டாக்டர் ஜெயபாலை வெட்டியவர்களை பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (41), கருப்பசாமி (32) என்பது தெரியவந்தது. எதற்காக அவர்கள் டாக்டர் ஜெயபாலை வெட்டினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.