இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:46 PM GMT)

100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்காததை கண்டித்து இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சிவகங்கை

இளையான்குடி,

100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்காததை கண்டித்து இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதில் பெருமச்சேரி கிராம ஊராட்சியில் கடந்த 8 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் சேருவதற்கான அடையாள அட்டை வழங்காததை கண்டித்து கிராமத்தினர் 15-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- பல்வேறு கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாளர்கள் வேலையில் சேராதபடி அதிகாரிகள் சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்து கிராம மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் தவறுகளை தட்டி கேட்டு கிராம மக்கள் பாதிக்காத வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


Next Story