திட்டமிட்டபடி 29-ந் தேதிகவர்னர் மாளிகை முற்றுகை
திட்டமிட்டபடி 29-ந் தேதிகவர்னர் மாளிகை முற்றுகை
திருப்பூர்
அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததால் சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி வருகிற 29-ந் தேதி நடக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
மக்கள் தொண்டர் பேரணி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 98-ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலையில் இருந்து நேற்று மாலை மக்கள் தொண்டர் படை பேரணி நடைபெற்றது. திருப்பூர் அரிசிக்கடை வீதியில் பேரணி நிறைவு பெற்று அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. மழை கொட்டியபோதும் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடந்தது. மழையில் நினைந்தபடி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-
மத்திய அரசு மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக, மதவெறியின் பேரில் மக்களை பிளவுபடுத்தி, சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்தி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறது. இன்று அதிகாரத்துக்கு வந்துள்ளவர்கள், ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்ம கொள்கையை இந்த மண்ணில் அமல்படுத்துதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது நாட்டுக்கும், மக்களுக்கும் ஆபத்து. இதை எதிர்த்து தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கு, சமூகத்தை மாற்றியமைப்பதற்கு, புதிய சமுதாயத்தை வழங்குவதற்கு போராடி வருகிறது.
முற்றுகை போராட்டம்
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக அவசர சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல், அனுமதி அளிக்காமல் அந்த சட்டத்தின் மீது சந்தேகத்தை கிளப்பினார். 24 மணி நேரத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது. இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மாறாக சூதாட்டத்தை நடத்துகிற 9 முதலாளிகளுடன் கவர்னர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரியவில்லை. மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக அவர் பேசுகிறார். இந்தியா இந்துக்களின் நாடு என்கிறார்.
மோடி அரசே தமிழக கவர்னரை திரும்ப பெற்றுக்கொள் என்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்து பலமாதம் ஆகிறது. இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. நேரடியாக கள போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் வருகிற 29-ந் தேதி, சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். எங்களை கைது செய்தாலும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பரிசு
பின்னர் நிருபர்களிடம் கூறிய மாநில செயலாளர் முத்தரசன், 'தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.1,000 அறிவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கரும்பு, தேங்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களையும் வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.