மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முற்றுகை
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மயிலாடுதுறை தலைமை தபால்நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மயிலாடுதுறை தலைமை தபால்நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
தபால்நிலையம் முற்றுகை
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஐய்யப்பன், மணிபாரதி, வெண்ணிலா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து கச்சேரி ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர்.
தள்ளு முள்ளு...
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அந்த போராட்ட குழுவினரை தபால் நிலையம் வாசலில் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி., பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி தபால்நிலையம் உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது போலீசார் வைத்திருந்த தடுப்புகளை பிடித்து இழுத்ததால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.