தடையில்லா மின்சாரம் வழங்ககோரி கையெழுத்து இயக்கம்
தடையில்லா மின்சாரம் வழங்ககோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் கோவில்பாப்பாக்குடி கிராமத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் மகரிஷி பள்ளி வரை திருப்பாலை மின் நிலையத்திலிருந்தும் மீதமுள்ள பகுதிகளுக்கு சமயநல்லூர் மின் நிலையத்திலிருந்து மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. திருப்பாலை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்புகள் பெறப்பட்ட குடியிருப்புகளுக்கு அதிக அளவில் மின்தடை ஏற்படுவதில்லை. ஆனால் சமயநல்லூர் மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு பெறப்படும் பகுதிகளுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. லேசாக மழை பெய்தாலோ, காற்றடித்தாலோ மின்தடை ஏற்படுகிறது. சமீப காலமாக இந்த பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாகி வருவதால், மின்தடை ஏற்படுவது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி, பிளக்ஸ் பேனரில் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றனர்.