புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் பொறுப்பேற்பு
நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சிலம்பரசன், ‘போலீசாரின் நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டே இருக்கும்’ என்று கூறினார்.
நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற சிலம்பரசன், 'போலீசாரின் நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டே இருக்கும்' என்று கூறினார்.
ெபாறுப்பேற்பு
அம்பையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த சிலம்பரசன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சிலம்பரசன் நேற்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உளவுத்துறை அறிக்கைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும்.
பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரின் நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டே இருக்கும்.
பொதுமக்கள் எந்த நேரமும் என்னை 94981 01775 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.