யோகாவில் பதக்கங்களை குவிக்கும் சீர்காழி கல்லூரி மாணவி


யோகாவில் பதக்கங்களை குவிக்கும் சீர்காழி கல்லூரி மாணவி
x

சீர்காழியை சேர்ந்த கல்லூரி மாணவி யோகாவில் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன்-சீதா தம்பதியின் மகள் சுபானு (வயது 18). 3 வயது முதலே யோகாவின் மீது அதிக ஈடுபாடு கொண்ட இவர் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

சுபானுவின் யோகா திறமையை கண்டு வியந்த பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் அவரை ஊக்கப்படுத்தினர். இதனால், யோகாவில் பல்வேறு சாதனைகளை படைத்தார். சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, அபுதாபி, சவுதி, ஆப்பிரிக்கா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று யோகா செய்து சாதனை படைத்தார்.

பதக்கங்கள் குவிப்பு

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரது தந்தை மணிவண்ணன் இறந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தந்தையின் மறைவு ஒருபுறம் வாட்டினாலும், யோகாவில் மேலும் சாதனை படைக்க வேண்டும் என்று மாணவி உறுதி பூண்டார். இதனால், யோகாவில் பல்வேறு நிலைகளில் சாதனை படைத்து அமைச்சர்கள் மற்றும் பலரது பாராட்டை பெற்றார்.

அந்தவகையில் அவர் இதுவரை 270 பதக்கங்களை குவித்துள்ளார். தற்போது அவர் தன் தாயின் சிறு வருமானத்தின் மூலம் நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் நேச்சுரோபதி யோகா படித்து வருகிறார்.

ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்

இதுகுறித்து மாணவி சுபானு கூறுகையில், யோகாவை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வேண்டும். அப்படி ஒலிம்பிக்கில் யோகாவை சேர்த்தால் இந்தியா சார்பில் நான் பங்கேற்று நிச்சயம் தங்கப்பதக்கத்தை வெல்வேன். ஜூன் மாதம் 21-ந் தேதியை உலக யோகா தினமாக அறிவித்து செயல்படுத்திய பிரதமர் மோடியின் முன்பாக யோகா பயிற்சி செய்து காண்பிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். யோகாவின் முக்கியத்துவம் குறித்து ஐ.நா.சபையில் பேசுவதற்கும் தயாராக இருக்கிறேன் என்றார்.



Next Story