சீர்காழி –திருமுல்லைவாசல் சாலையை சீரமைக்க வேண்டும்


சீர்காழி –திருமுல்லைவாசல் சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி- திருமுல்லைவாசல் இடையேயான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

சீர்காழி- திருமுல்லைவாசல் இடையேயான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலை மிகவும் பிரதானமான சாலை ஆகும். நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும். இந்த சாலையின் வழியாக அரசு, பள்ளி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

மேலும் நெடுஞ்சாலை பணிக்காக இப்பகுதியில் உள்ள திருமுல்லைவாசலில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி சென்று வருகின்றன. தற்போது சீர்காழியிலிருந்து திருமுல்லைவாசல் வரை உள்ள இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

விபத்துகள்

சாலையின் இரு புறங்களிலும் கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றது. மேலும் வடகால் கிராமத்திலிருந்து இடமணல் வரை செல்லும் பொறைவாய்க்கால் சாலையை ஒட்டி செல்வதால் சாலையும், வாய்க்காலும் ஒன்றாகவே உள்ளது. இதனால் புதிதாக இந்த பகுதிகளில் செல்பவர்கள் வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலைஉள்ளது.

மேலும் சாலை சேதமடைந்து இருப்பதால் பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். எனவே சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையை வாகனங்கள் மாறி செல்லும் அளவிற்கு அகலப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாலை மறியல்

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல் கூறியதாவது, சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் 17 கிலோ மீட்டர் தூர பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக மீனவர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் அதிகமாக நடந்து வருகிறது. மேலும் சாலையின் இரு புறங்களிலும் பராமரிப்புமின்றி முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது

இந்த சாலையை அகலப்படுத்த கோரியும். சாலையை சீரமைக்க கோரியும் சாலையோரம் உள்ள வாய்க்கால் பகுதி பள்ளமாக இருப்பதால் அப்பகுதியில் தடுப்பு வளையம் அமைக்க கோரியும் பல கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்காத தேசியநெடுஞ்சாலை துறையை கண்டித்து கொள்ளிடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளோம் என்று கூறினார்.


Next Story