வெள்ளகோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்


வெள்ளகோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
x
திருப்பூர்


வெள்ளகோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிறுத்ைத நடமாட்டம்

வனவிலங்குகளை வனப்பகுதியில் பார்ப்பதை விட குடியிருப்பு பகுதிகளில் பார்ப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் வன விலங்கு-மனித மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலால் மனித உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்தால் அதற்கும் தொல்லை.அதனால் மற்றவர்களுக்கும் பிரச்சினைதான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. தற்போது வெள்ளகோவில் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்படுகிறது. இது பற்றிய விபரம் வருமாறு:-

வெள்ளகோவில் அருகில் உள்ள குருக்கத்தி திருப்பூர்- கரூர் மாவட்ட எல்லையாக உள்ளது. இங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று நடமாடுவதாகவும், அது ஆடுகள், ஆட்டுக்குட்டிகள், நாய்களை கடித்து குதறி வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்த சிறுத்தை தற்போது இடம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த குருக்கத்தி, இலுப்பை கிணறு, கல்லமடை, ஒத்தக்கடை, கே.வி. பழனிச்சாமி நகர், நாட்டராயசுவாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திரிவதாகவும், அதை சிலர் பார்த்து பீதி அடைந்து ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் வேறு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

ெபாதுமக்கள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம் குறித்து காங்கயம் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- வெள்ளகோவில் குருக்கத்தி உள்ளிட்ட சில பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் பதிவான காட்சிகளை வைத்து பார்க்கும் போது சிறுத்தை குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆனாலும் வெள்ளகோவில் பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வேறு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெள்ளகோவில் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story