கிராமத்துக்குள் புகுந்து ஆடு, கன்று குட்டிகளை கடித்து கொன்ற சிறுத்தை


திருப்பூர்


காங்கயம் அருகே ஊதியூர் மலை அடிவாரத்தில் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஆடு, கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்றது. சிறுத்தையை நேரில் பார்த்த பெண் மொபட்டை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.

சிறுத்தை நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும். இங்கு மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு, மயில், உடும்பு போன்றவை வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிறுத்தை எங்கிருந்தோ தப்பி ஊதியூர் மலை பகுதிக்கு கடந்த வாரம் வந்து பதுங்கியது. இந்த சிறுத்தை மலையடிவாரத்தில் உள்ள தாயம்பாளையம் ரத்தினசாமி என்பவரது ஆட்டுப்பட்டியில் புகுந்து ஒரு ஆட்டை கடித்துக்கொன்று மலையடிவாரத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் 10 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். ஆனால் கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊதியூரில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாட்டையும் கடித்து கொன்று மலையடிவாரத்தில் போட்டது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

கன்றுக்குட்டியை கடித்து குதறியது

இந்த நிலையில் நேற்று ஊதியூர் மலையடிவாரத்தில் உள்ள சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் முன்பு கட்டிப்போட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து இழுத்துச்சென்றது. அப்போது அங்கிருந்த நாய்கள் குரைக்கவே கன்றுக்குட்டியை சிறிது தூரத்தில் போட்டு விட்டு ஓடி விட்டது. சிறுத்தையை பார்க்காவிட்டாலும் அந்த பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்து வந்தனர்.

அதன் பின்னர் ஊதியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த மரக்கிளைகள் வேகமாக அசைந்ததால் மொபட்டை நிறுத்தி விட்டு பார்த்தார். அங்கு மரத்தில் இருந்து கீழே குதித்த சிறுத்தை தாராபுரம் சாலையை கடந்து வேகமாக மலைக்குள் ஓடிவிட்டது. இதனால் மொபட்டை போட்டு விட்டு அந்த பெண் ஓட்டம் பிடித்தார்.

எச்சரிக்கை பலகை

இது பற்றிய தகவல் கிடைத்ததும் காங்கயம் வன அலுவலர் தனபால் தலைமையிலான வனத்துறையினர், வனக்குழு தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஊதியூர் வந்து சிறுத்தையால் கடித்து கொல்லப்பட்ட கன்றுக்குட்டியை ஆய்வு செய்தனர். அத்துடன் மலையடிவாரத்தில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகைகளையும் வைத்துள்ளனர்.

இதுபற்றி வனத்துறை அலுவலர் கூறும்போது "சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று (நேற்று) மாலைக்குள் உடுமலையில் இருந்து கூண்டு கொண்டு வரப்படும். இதில் சிறுத்தை கடித்துப்போட்டுள்ள கன்றுக்குட்டியை போட்டு பிடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து சிறுத்தையை பிடிக்கநேற்று இரவு ஊதியூர் மலை அடிவார பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டிற்குள் செத்துப்ேபான கன்றுக்குட்டி போடப்பட்டுள்ளது.


Next Story