அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரத்தில் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்,
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (வயது 35), வீரமுத்து (32). பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தை சேர்ந்த இருவருமே திருமணமானவர்கள். இதில் வீரமுத்து லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு ஜெயங்கொண்டானில் இருந்து தனது வீட்டுக்கு வீரமுத்து நடந்து சென்றார்.
அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வீரமுத்து சரிந்தார். அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்த வீரமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமுத்து பரிதாபமாக இறந்து போனார்.
இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீரமுத்து அவரது அண்ணன் மாரிமுத்து மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து வீரமுத்துவை வீட்டுக்கு வரும்போது வழி மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் வீரமுத்து இறந்து போனது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைது செய்தனர். அவர் தனியாக இந்த செயலில் ஈடுபட்டாரா?, அல்லது வேறு யாருடனும் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.