கிணற்றில் குதித்து அக்காள்-தங்கை தற்கொலை


கிணற்றில் குதித்து அக்காள்-தங்கை தற்கொலை
x
தினத்தந்தி 7 Jun 2023 1:36 AM IST (Updated: 7 Jun 2023 4:16 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் குதித்து அக்காள்-தங்கை தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

அக்காள்-தங்கை

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன்புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகள்கள் வித்யா (வயது 21), காயத்திரி (20). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் அயன்புதுப்பட்டியில் ேநற்று முன்தினம் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யாவும், காயத்திரியும் சொந்த ஊருக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் ெதாடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

காதலுக்கு எதிர்ப்பு

இதனால் சந்தேகமடைந்த அகிலாண்டேஸ்வரி, அவர்கள் 2 பேரிடமும் விசாரித்துள்ளார். அப்போது காங்கேயத்தை சேர்ந்த ஒரு வாலிபரை வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரை காயத்திரியும் காதலித்து வருவதாக கூறியுள்ளனர். மகள்களின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2 பேரையும் அகிலாண்டேஸ்வரி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற வித்யாவும், காயத்திரியும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் கரையில் 2 செல்போன்கள் கிடந்ததை, அப்பகுதியில் மாடு மேய்த்தவர்கள் பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கிணற்றுக்குள் பார்த்தபோது, தண்ணீரில் ஒரு பெண் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கிணற்றில் பிணங்கள்

இது பற்றி அவர்கள் உடனடியாக வளநாடு போலீசார் மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பிணமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர். மேலும் அங்கு வந்த வளநாடு போலீசார், இது பற்றி விசாரணை நடத்தியபோது, கிணற்றில் பிணமாக மிதந்தது காயத்திரி என்பது தெரியவந்தது.

மேலும் கரையில் 2 செல்போன்கள் இருந்ததால், வித்யாவும் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து கிணற்றுக்குள் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது தண்ணீருக்கடியில் இருந்து வித்யாவை பிணமாக மீட்டனர். இதில் வித்யா தனது கையில் தனது பெயரை எழுதியிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து வித்யா, காயத்திரி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் கண்டித்ததால் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வித்யா, காயத்திரி ஆகியோரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்காள்-தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story