தங்கையின் காதல் கணவரைஸ்குரு டிரைவரால் குத்திய வாலிபர்
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் தங்கையின் காதல் கணவரை ஸ்குரு டிரைவரால் குத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்தார்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் தங்கையின் காதல் கணவரை வாலிபர் ஸ்குரு டிரைவரால் குத்தியதில் காயம் அடைந்தார். இதை தடுக்க வந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதலர்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கோகுல் சத்தியசேகர் (வயது 23). மார்த்தாண்டத்தில் ஒரு கருப்புக்கட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.
காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பவானி.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவிலில் திருமணம்
இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே பவானியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று போலீசாரின் விசாரணைக்காக கோகுல் சத்தியசேகர் -பவானி ஆகியோர் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் 2 பேரிடமும் விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.
இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் போலீஸ் நிலையத்தில் இருந்தனர்.
தாக்குதல்
அப்போது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி (25) தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் கோகுல் சத்தியசேகரை குத்தினார்.
இதைபார்த்ததும் உஷாரான சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தடுக்க முயன்றார். அப்போது அவரது வலது கையில் குத்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கோகுல் சத்தியசேகர் கழுத்தில் குத்து விழுந்து சிறுகாயம் ஏற்பட்டது.
கொலை முயற்சி வழக்கு
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும், கோகுல் சத்தியசேகர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து முத்துப்பாண்டி மீது கொலை முயற்சி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.