சிவகங்கை அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் அவசர மனு
சிவகங்கை அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிவகங்கையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்தநிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரும் மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. சார்பில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி இளங்கோவன் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, அடையாளம் தெரியாத நபர்கள் சில இடங்களில் போஸ்டர்களை கிழித்துள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும் போலீசார் தரப்பில் தேவையான அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, கூடுதல் போலீஸ் பாதுகாப்புக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை சிவகங்கை மாவட்ட போலீசார் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.