100 நாள் திட்ட தொழிலாளர்கள் 6 பேர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்


100 நாள் திட்ட தொழிலாளர்கள் 6 பேர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்
x

இயற்கை உரம்போடும் பணியில் ஈடுபட்ட 100 நாள் திட்ட தொழிலாளர்கள் 6 பேர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

இயற்கை உரம்போடும் பணியில் ஈடுபட்ட 100 நாள் திட்ட தொழிலாளர்கள் 6 பேர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

100 நாள் வேலை திட்ட பணிகள்

ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தென்னைமரங்களுக்கு இயற்கை உரம்போடும் பணிகள் நடந்து வருகின்றன.

கேத்தாண்டப்பட்டி அருகே சின்னூர் பகுதியில் கோபிநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 22 பெண்கள் ஒரு ஆண் என 23 பேர் நேற்று பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் தென்னை மரத்துக்கு இயற்கை உரம்போட்டு மண்ணை கொட்டிக்கொண்டிருந்தனர்.

அப்போது கேத்தாண்டப்பட்டி அய்யா குட்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்களான ராஜா மனைவி விஜயலட்சுமி (வயது 21) குமார் மனைவி சாலம்மாள் (35), வீரராகவன் மனைவி கவிதா (31) சுரேஷ் மனைவி அனு (வயது 28) கணேசன் மனைவி நவநீதம் (55) மற்றும் ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் மனைவி சத்தியா (32) ஆகிய 6 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே அவர்கள் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் கோபிநாதன் கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மானிய விலையில் இயற்கை உரங்களை வாங்கி தனது நிலத்தில் உள்ள தென்னை மரத்திற்கு இயற்கை உரங்களை போட்டுயுள்ளார். அதில் ஏதும் பாதிப்பு இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை சுகாதார துறையினர் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.


Next Story