நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
x

கும்பகோணம் அரசு கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தனராஜன் கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அரசு கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தனராஜன் கூறினார்.

உயர் கல்வி

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி ஆண்கள் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உயர்கல்விக்கான களப்பயணம் என்ற நிகழ்ச்சி நடந்தது.

இதில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 125 பேர் பங்கேற்றனர். அப்போது மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் தனராஜன் மற்றும் பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனராஜன் பேசுகையில், 'நான் முதல்வர் திட்டம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கனவுத்திட்டம். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வழங்கும் உன்னதமான திட்டம். கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கு மட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பை தருவதாக இருக்கவேண்டும். இந்த எண்ணத்தில் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

முன்னணி நிறுவனங்களுடன்...

மேலும் இந்த கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரகூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விப்ரோ, கேம்பிரிட்ஜ், மைக்ரோ சாப்ட், அபெக்ஸ், டி.சி.எஸ். போன்ற பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்பை பெற வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் வேதியியல் துறைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் பற்றி காணொலிக்காட்சி மூலம் விளக்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள ஆய்வகங்கள், நூலகத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ரூபி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலைப்பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்கள் பியூலா, விவேகானந்தன், ஜஸ்டின் பால் மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சாமியப்பா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story