தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்கம்
தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அரசு மாணவர் விடுதியில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பயிற்சி மையத்தை திறந்து வைத்து நல உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தமிழக தூய்மை பணியாளர்கள் நலவாரிய துணைத்தலைவர் கோவிந்தராஜ், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில் கூறியதாவது:-
தமிழகத்தில் இது முன்னோடி திட்டம் ஆகும். ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உலக தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக தமிழகத்திலேயே முதன் முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தூய்மை பணியாளர்களின் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க உறைவிட பள்ளியாக இது திறக்கப்பட்டு உள்ளது. இதில் சேரும் தூய்மை பணியாளர்களின் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் வரை கல்வி உதவி தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். எந்த கல்வி நிறுவனத்தில் படித்தாலும், அங்கிருந்து பயிற்சி மையத்துக்கு வந்து சேர இலவச பஸ் பாஸ் வசதியும் வழங்கப்படும். தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆங்கிலமும், 7 மணி முதல் 8 மணி வரை கணித பாடமும் கற்றுத்தரப்படும். சனிக்கிழமைதோறும் விளையாட்டு பயிற்சி, நல்லொழுக்க வகுப்பு நடத்தப்படும். இந்த வாய்ப்பை தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாட்கோ மேலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.