இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளை முன்னணி நிறுவனங்களோடு இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குறுகிய கால இலவச திறன் பயிற்சி திட்டங்கள், சங்கல்ப் திட்டம், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுக்காக நடைபெறவிருக்கும் இலவச திறன் பயிற்சிகள் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை ஆய்வு செய்தார்.
"நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்பொழுது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகளுக்கு ஆலோசனை
இதற்கென தொடங்கப்பட்ட www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மாணவ சமுதாயத்திற்கு பலன் அளிக்கும் விதமாக மேலும் மேம்படுத்தவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
மேலும், குறுகிய கால பயிற்சி நிறுவனங்களை ஆய்வு செய்து தரமான பயிற்சிகள் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யுமாறும், சிறப்பு திட்டங்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த திறன் பயிற்சிகளை முன்னணி நிறுவனங்களோடு இணைந்து வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அமைத்திட வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அலுவலர்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.